கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை
இணைப்பு பேருந்து இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வது சிரமமாக உள்ளது என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று முன்தினம் செயல்பட தொடங்கியது. எழில்மிகு வடிவமைப்புடன் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.
இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய பேருந்து முனையத்துக்கு பயணிகள் வருவதற்கு சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களையே அதிகம் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் குறித்த விவரம் தெளிவாக இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல முறையான இணைப்புப் பேருந்து இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வது பயணிகளுக்கு சிரமமாக உள்ளதாகவும், சென்னையில் உள்ள அனைத்துப் பணிமனைகளிலிருந்தும் புதிய பேருந்து முனையத்துக்கு கூடுதல் எண்ணிக்கையில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பேருந்து நிலையத்தில், எந்த தடத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது பற்றிய விவரப் பலகைகள் வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.