பஸ் நிறுத்தங்களை பயன்படுத்த முடியாமல் பயணிகள், மாணவிகள் கடும் அவதி


பஸ் நிறுத்தங்களை பயன்படுத்த முடியாமல் பயணிகள், மாணவிகள் கடும் அவதி
x

ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களை பயன்படுத்த முடியாமல் பயணிகள், மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

வெயிலில் நின்று பஸ் ஏறும் சூழல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலை காந்தி பூங்கா முன்பாக பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இதேபோல் ஜெயங்கொண்டம் கருப்பையா நகரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் பெரும்பாலும் இந்த பஸ் நிறுத்த நிழற்குடைகளை பொதுமக்கள், பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த நிழற்குடை முன்பாக பயணிகளும், பொதுமக்களும் நிற்க முடியாமலும், உள்ளே செல்ல முடியாத சூழலும் உள்ளது.

காரணம் நிழற்குடை முன்பாக சாலையோர கடைக்காரர்களான தள்ளுவண்டிகள், டிபன் கடை, பழக்கடை, ஆட்டோ நிறுத்தங்கள் என சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் பயணிகள் குறிப்பாக பள்ளி மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏற முடியாத சூழல் உள்ளது. கருப்பையா பஸ் நிறுத்தத்தை ஒட்டியே தனியார் பள்ளியும், 1 கிலோ மீட்டர் தொலைவில் அரசு பள்ளியும் உள்ளது. தற்போது வெயில் காலம் நெருங்கி விட்டதால் கொளுத்தும் வெயிலில் மாணவ-மாணவிகள் உள்ளே செல்ல முடியாமல் வெயிலில் நின்று பஸ் ஏறும் சூழல் உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

காலை முதல் மாலை வரை பள்ளி முடிந்து சோர்வாக நிற்கும் மாணவ-மாணவிகள் சில நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மயங்கிய சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் தட்டு தடுமாறி பஸ் நிறுத்தத்தில் உள்ளே சென்று அமரலாம் என நினைத்தால் கூட ஆக்கிரமித்து இருக்கும் கடைக்காரர்களின் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முடியாத சூழல் உள்ளதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் பள்ளி மாணவிகள், ஆசிரியைகளுக்கு சமூக விரோதிகள் சிலர் இடையூறு கொடுக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஜெயங்கொண்டம் பகுதி பஸ் நிறுத்தங்கள், மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே காந்தி பூங்கா மற்றும் கருப்பையா நகர் பஸ் நிறுத்தங்கள் முன்பு உள்ள கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story