சென்னை-அயோத்தி விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி


சென்னை-அயோத்தி விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி
x

கோப்புப்படம் 

சென்னையில் இருந்து அயோத்திக்கு முதல் விமானத்தில் 163 பயணிகள் சென்றனர்.

மீனம்பாக்கம்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

அயோத்திக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது. லக்னோ சென்று அங்கிருந்து அயோத்திக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவையை ஸ்பைஜெட் விமான நிறுவனம் நேற்று முதல் தொடங்கியது.

சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.15 மணிக்கு அயோத்தி விமான நிலையம் சென்றடையும். அதேபோல அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம், சென்னைக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேரும்.

ஆனால் வடமாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக நேற்று முதல் விமானம் பகல் 12.40 மணிக்கு பதிலாக 2 மணிநேரம் தாமதமாக மதியம் 2.45 மணிக்கு 163 பயணிகளுடன் அயோத்திக்கு புறப்பட்டு சென்றது. அயோத்திக்கு முதல் விமானத்தில் சென்ற பயணிகளை விமான நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். அயோத்திக்கு நேரடி விமான சேவை மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான கட்டணம், வரிகள் உள்பட ரூ.6,499 என முடிவு செய்து கடந்த 13-ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டது. அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கியதும் ஏராளமானவர்கள் முன்பதிவு செய்ய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.

முதல் விமானத்தில் 163 பயணிகள் சென்றாலும் சில இருக்கைகள் இருந்தன. ஆனால் ரூ.27 ஆயிரம் வரை கட்டணமாக இருந்ததால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பயணிகள் முன்பதிவு தொடங்கி விட்டதால் குறைந்த கட்டணத்தில் இருந்த பெரும்பாலான இருக்கைகள் நிரம்பி விட்டன. தற்போது கூடுதல் கட்டண இருக்கைகள் தான் இருப்பதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story