விமானம் தாமதத்தால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்


விமானம் தாமதத்தால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்
x

விமானம் தாமதத்தால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சார்ஜாவில் இருந்து காலை 10.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேரும். இந்த விமானம் மீண்டும் மதியம் 12.50 மணிக்கு குவைத் நோக்கி புறப்பட்டு செல்லும்.

அதன்படி நேற்று மதியம் 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த 158 பயணிகள், 3 மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 9.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வர தொடங்கினர். இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வரவில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமான நிறுவனத்தின் சார்பில் விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்சி கலையரங்கம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் பயணிகளுக்கு, சார்ஜாவில் இருந்து விமானம் தாமதமாக வருகிறது. மாலை சுமார் 4 மணியளவில் விமானம் வந்தவுடன் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்று விமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாலை 4 மணி ஆன பிறகும் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய விமானம் சார்ஜாவில் இருந்து புறப்படவில்லை என்பதை அறிந்த பயணிகள், போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் விமானம் வரும் நேரம் குறித்து விமான நிறுவனத்தினர் எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலை இருந்தது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story