திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்லவிழுப்புரம் ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் :கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்ல விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனா். கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக காட்பாடிக்கு தினந்தோறும் பயணிகள் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலை செல்வதற்காக ஏராளமான பயணிகள், மயிலாடுதுறையில் இருந்து பயணம் செய்ததால் அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனிடையே அந்த ரெயில், இரவு 9 மணியளவில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல 300-க்கும் மேற்பட்ட பயணிகள் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயிலில் ஏறினர். இதனால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏற்கனவே மயிலாடுதுறையில் இருந்தே கூட்டநெரிசலோடு வந்ததால் அந்த ரெயிலில் ஏற முடியாமல் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். பலர் முண்டியடித்துக்கொண்டு ரெயிலில் ஏறினர். இதில் பெண்கள் ஒருவருக்கொருவர் கூட்டநெரிசலில் சண்டை போட்டுக்கொண்டனர். ஆகவே இதுபோன்ற கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் சிரமத்தை போக்கிடும் வகையிலும், பவுர்ணமி கிரிவலத்தின்போது இம்மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.