டிக்கெட் முன்பதிவு மையத்தை ஞாயிற்றுக்கிழமையும் செயல்படுத்த வேண்டும்- பயணிகள்


டிக்கெட் முன்பதிவு மையத்தை ஞாயிற்றுக்கிழமையும் செயல்படுத்த வேண்டும்- பயணிகள்
x

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையத்தை ஞாயிற்றுக்கிழமையும் செயல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையத்தை ஞாயிற்றுக்கிழமையும் செயல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பதிவு மையம்

மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி ரெயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலத்தில் அப்போதைய மத்திய ரெயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி ஏற்பாட்டில் 4.1. 2004-ல் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வந்தது.

பிறகு அகல ரெயில் பாதை அமைப்பதற்காக டிக்கெட் முன்பதிவு மைய பணிகள் நிறுத்தப்பட்டது. அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு பட்டுக்கோட்டையில் டிக்கெட் முன்பதிவு மையம் மீண்டும் இயங்க தொடங்கியது. இந்த டிக்கெட் முன்பதிவு மையம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கி வந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்கவில்லை.

பயணிகள் கோரிக்கை

இதனால் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பயணம் செய்பவர்கள் மற்றும் இப்பகுதியில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களும் திங்கட்கிழமை ரெயிலில் பயணம் செய்ய ஞாயிற்றுக்கிழமை தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய மன்னார்குடி மற்றும் தஞ்சாவூர் போன்ற வெளியூர்களுக்கு செல்ல வேண்டி இருந்தது.

பட்டுக்கோட்டைக்கு ஆய்வுப்பணிக்காக வருகை தந்த திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வாலிடம் பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இதன் பிறகு வாரம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உட்பட டிக்கெட் முன்பதிவு மையம் இயங்கி வந்தது.

ஞாயிற்றுக்கிழமை இயங்க வேண்டும்

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போதிய அளவு டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது.

தற்போது பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்கவில்லை.

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ரெயில்வே மேலாளருக்கு மனு

இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

செங்கோட்டை-தாம்பரம் அதி விரைவு ரெயில் 2.6.2023 முதல் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செல்கிறது. பட்டுக்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை இந்த ரெயிலில் பயணம் செய்ய ஞாயிற்றுக்கிழமை அன்று தட்கல் பதிவு மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய இயலவில்லை. சாதாரண முன்பதிவும் செய்ய இயலவில்லை. மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் இயலவில்லை.

எனவே பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன் பதிவு மையம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story