போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் நடைமேடைகளில் உட்காரும் பயணிகள்


போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் நடைமேடைகளில் உட்காரும் பயணிகள்
x

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள் நடைமேடைகளில் அமரும் அவல நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள் நடைமேடைகளில் அமரும் அவல நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பழைய பஸ் நிலையம்

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.1054 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள், மின் விளக்கு பணிகள், மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம், பூங்காக்கள் சீரமைப்பு, அகழி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டன. மேலும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது.

5 மாதங்கள் ஆகிறது

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தஞ்சை பழைய பஸ் நிலையம் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு, 13 நாட்கள் தாமதத்துக்குப் பிறகு டிசம்பர் 21-ந் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது.

புதிதாக கட்டப்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு 39 பஸ்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளன, பெரும்பாலும் தஞ்சையில் இருந்து வல்லம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு, திருக்கருக்காவூர், மருங்குளம், அய்யம்பேட்டை, அம்மாப்பேட்டை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அரியலூர் மாவட்டத்துக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போதிய இருக்கை வசதிகள் இல்லை

புதிதாக திறக்கப்பட்ட பஸ்நிலையத்தில் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பஸ் வரும் வரை நிற்க கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பயணிகள் அனைவரும் பஸ்கள் வந்து நிற்க கூடிய நடைமேடை பகுதிகளில் அமரும் நிலை தான் உள்ளது. கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே இயக்கப்படுவதால் அந்த பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு காத்திருக்கும் பயணிகள் இருக்கைகளில் அமருவதற்கு போதிய வசதிகள் இல்லாததால் கால்கடுக்க நிற்கவேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் மற்றும் நடைமேடைகளில் உட்காரும் நிலை தான் காணப்படுகிறது. சில நேரங்களில் வழிநெடுக உட்கார்ந்திருப்பதை காண முடிகிறது.

அச்சத்துடன் பயணிகள்

மேலும் இந்த பஸ் நிலையத்தில் மையப்பகுதியில் கடைகள் வரிசையாக இருப்பதால் பஸ்நிலையத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள கடைகளுக்கு இடையே செல்வதற்காக வழிகள் உள்ளன. அந்த பகுதியில் சில இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. சில இடங்களிலும் அதுவும் இல்லாத நிலை தான் காணப்படுகிறது.

அவ்வாறு வழித்தடங்களில் உள்ள இருக்கைகளில் பயணிகள் அமர்ந்திருந்தால் தாங்கள் செல்லும் பஸ்களை அங்கிருந்து பர்க்க முடியாத நிலை தான் உள்ளது. இதனால் அவர்கள் பதற்றத்துடனே அமர்ந்திருக்கும் நிலை உள்ளது. மேலும் பஸ் வந்து விட்டதா? என எழுந்து சென்று பார்த்து வருவதற்குள் அந்த இடத்தை மற்றவர்கள் வந்து அமர்ந்து விடுகின்றனர்.

முதியவர்கள் அவதி

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் என அதிக அளவில் பஸ்சில் செல்கிறார்கள். சில நேரங்களில் வயதான முதியவர்கள் வரும் போது அவர்கள் இருக்கை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதையும் மீறி நடைமேடைகளில் உட்காரும் போது, பஸ் வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்து சென்று பஸ் ஏற முடியாத நிலை உள்ளது.

எனவே புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட பஸ் நிலையத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக அதிக அளவு இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Next Story