புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்:கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி


புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்:கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி
x

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்



தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க.சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அங்கு தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

இந்நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வேலை நிமித்தமாகவும், ஆஸ்பத்திரிகளுக்கும் அதிக அளவில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால் நேற்று தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் கடலூர் பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் புதுச்சேரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

பஸ் கண்ணாடி உடைப்பு

அவர்கள் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் ஏறிச்சென்றனர். இதனால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறி சென்றனர். இதற்கிடையில் கடலூரில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு பஸ் கண்ணாடி மீது சிலர் கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இதை அறிந்ததும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட ஒரு சில அரசு பஸ்கள் இந்திரா காந்தி சிலை வரை சென்று திரும்பியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இருப்பினும் தனியார் பஸ்கள் ஓடாததால் சிலர் ஆட்டோ, கார், வேன் போன்றவற்றில் ஏறி சென்றதை பார்க்க முடிந்தது. பெரும்பாலானோர் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். சில அரசு பஸ்கள் புதுச்சேரிக்கு செல்லாமல் கடலூர் மாவட்ட எல்லை வரை சென்று வந்தது. அதில் பயணிகள் ஏறிச்சென்றதையும் பார்க்க முடிந்தது.


Next Story