திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையால் பயணிகள் அவதி; சீரமைக்க கோரிக்கை


திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையால் பயணிகள் அவதி; சீரமைக்க கோரிக்கை
x

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதை விரைந்து சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் ரெயில் நிலையம்

சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் தற்போது 22 விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 170 புறநகர் மின்சார ரெயில்களும் அன்றாடம் நின்று செல்கின்றன. மேலும் அன்றாடம் 1.5 லட்சம் மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ரெயில் நிலையத்தில் 1 முதல் 6 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று நடைமேடைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் கவன குறைவாக தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில்களில் அடிபட்டு பலர் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

சுரங்கப்பாதை

இதனால் ரெயில்வே நிர்வாகம் நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல ரெயில்வே நடை மேம்பாலம் கட்டப்பட்டிருந்தாலும் பலர் அவற்றின் மீது ஏறி இறங்க முடியாததால் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதையடுத்து பொதுமக்கள் வசதிக்காக கடந்த 2020-ம் ஆண்டு ரூ.6 கோடி செலவில் 250 மீட்டர் நீளம் 15 அடி அகலத்தில் 6 நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் 4 நுழைவாயில்கள் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி துவக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

தரமற்ற சுரங்கபாதை

இந்நிலையில் திறக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதையில் சரியாக கட்டுமான பணிகள் நடைபெறாததால் மழைகாலங்களில் சுரங்கப்பாதையில் சுற்று சுவற்றின் பக்கவாட்டுகளிலும் மேற்கூறையிலும் மழைநீர் கசிந்து தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் வழக்கம்போல் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். மேலும், இரவு நேரத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டால் சுரங்கப்பாதை முழுவதும் இருளில் மூழ்கி அதனுள் நடந்து செல்லும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

சுரங்கப்பாதையினுள் பெண்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவில்லை. வயதானவர்கள் செல்வதற்கான நகரும் படிக்கட்டு வசதிகள் அமைக்கப்படவில்லை.

எனவே எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள திருவள்ளூர் ரெயில்வே சுரங்க பாதையில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story