கழிவறையின்றி பயணிகள் கடும் அவதி; நோய் தொற்று அபாயம்
ெஜயங்கொண்டம் புதிய பஸ் நிலையத்தில் கழிவறை இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள் அவதி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பஸ் நிலைய கட்டிடம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை. இதனால் முதியவர்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கோரிக்கை விடுத்தும், அங்கு கழிவறை அமைக்க நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே சிலர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் மூக்கை பொத்தியவாரே செல்லும் சூழல் உள்ளது. மேலும் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் துர்நாற்றம் பொறுக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவறை அமைக்க வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் உள்ள இடியும் நிலையில் உள்ள பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் 2 சக்கர வாகன காப்பகமும், நவீன இலவச கழிப்பிட வசதியும் அமைத்து தரக்கோரி பயணிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனு கொடுத்தும் பலனில்லை
இதுகுறித்து ஜெயங்கொண்டம் பா.ம.க. நகர செயலாளர் பரசுராமன் கூறுகையில், ஜெயங்கொண்டம் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு இதுநாள் வரை இலவச நவீன கழிப்பறை இல்லாமல் பொதுமக்கள், மாணவிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இலவச நவீன கழிப்பறையை கட்டித் தர வேண்டும் எனவும், இதேபோல் இரு சக்கர வாகனம் காப்பகம் இல்லாமல் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு 2 சக்கர வாகன காப்பகத்தை பஸ் நிலையத்தில் அமைத்து தர வேண்டும். இதேபோல் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதிகளிலும் பஸ் நிறுத்தங்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நான்கு ரோடு பகுதியில் நவீன கழிப்பறையை கட்டித் தர வேண்டும் என்றார்.
அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு
ஜெயங்கொண்டம் சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருமான அண்ணாமலை கூறுகையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலைய பழைய கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் இதுபோன்ற கட்டிடம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். பஸ் நிலைய பகுதிகளில் பயணிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் பயன்பெறும் வகையில் இலவச நவீன கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.