குடிநீர் கழிவறை மேற்கூரை இல்லாமல் அல்லல்படும் பயணிகள்


குடிநீர் கழிவறை மேற்கூரை இல்லாமல் அல்லல்படும் பயணிகள்
x
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:46 PM GMT)

கடலூா் துறைமுகம் ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை மற்றும் மேற்கூரை வசதி இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதர ரெயில்வே நிர்வாகம் முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு ரெயில் பயணிகளிடம் உள்ளது

கடலூர்

கடலூர் முதுநகர்

கடலூர் துறைமுகம் சந்திப்பு

கடலூர் துறைமுகம் ரெயில்வே சந்திப்பு மிகவும் பழமையான ஒன்றாகும். இது சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கடலூர் துறைமுக பகுதி மிகப்பெரிய வர்த்தக மையமாக திகழ்ந்தபோது இந்த ரெயில் நிலையத்தில் பெரும்பாலான ரெயில்கள் நின்று சென்றன. இது தவிர இங்கிருந்து புற நகர்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க துறைமுகம் ரெயில் நிலையத்தில் தற்போது ஒருசில எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களை தவிர பெரும்பாலான ரெயில்கள் நிற்பதே இல்லை என்பதே பொதுமக்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டாகும். குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்லும் ரெயில்கள் இங்கு நிற்காததால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

குடிநீா் வருவதில்லை

மேலும் பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. பிளாட்பாரத்தில் பெரும்பாலான இடங்களில் மேற்கூரைகள் இல்லாததால், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் பயணிகள் அவதிப்படும் அவல நிலை உள்ளது.

அதேபோல் பயணிகளின் தாகத்தை தணிப்பதற்காக பிளாட்பாரத்தில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உள்ளன. அவசரத்துக்கு போய் தண்ணீர் பிடிக்கலாம் என்றால் குழாயில் இருந்து உஷ்.... என்ற சத்தம் மட்டுமே வருகிறதே தவிர குடிநீர் வராததால் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதை பார்க்கும் போது தண்ணீர் வரும் ஆனா வராது என்ற சினிமா வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

சுகாதார சீர்கேடு

இதேபோல் பிளாட்பாரத்தில் கட்டண கழிப்பறைகள் உள்ளன. ஆனால் அவற்றை பயன்படுத்த முடியாதபடி பூட்டி கிடக்கிறது. இதனால் ஆத்திர அவசரத்துக்கு அருகில் உள்ள திறந்த வெளி பகுதிகளையே பயணிகள் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ரெயில் நிலைய வளாகம் சுகாதார சீர்கேடு அடைந்து வரும் அவல நிலை உள்ளது.

ஒரு சில அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும்போது மட்டும் கழிவறைகள் திறக்கப்பட்டு, குழாய்களில் குடிநீர் வருவதாகவும், அவர்கள் சென்ற பின்னர் பழைய குருடி கதவ திறடி என்பதுபோலத்தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வாகன நிறுத்தும் இடம் இல்லை

300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள துறைமுகம் ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் இடம் இல்லாததும் வியப்பாக உள்ளது. இரவு நேரங்களில் பிளாட்பாரங்களில் மின் விளக்குகள் சரியாக எரியாததால் ரெயில் நிலையம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்குள் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்றே தெரிவதில்லை.

இங்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரெயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடு விழா கண்டுள்ளது. இதற்கு முன் இந்த பார்சல் சர்வீஸ் மூலம் வியாபாரிகள் மீன்கள் மற்றும் இதர பொருட்களை ரெயில்களில் வெளியூர்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மூடப்பட்ட பார்சல் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

துர்நாற்றம் வீசுகிறது

இது பற்றி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த அருள்முருகன் கூறும்போது, ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் மேற்கூரை இல்லாதது, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக ரெயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் மீன் மற்றும் இதர வியாபாரம் தடைபட்டுள்ளது. 3-வது 4-வது பிளாட்பாரங்கள் அருகே திறந்த வெளிப்பகுதியை சிலர் கழிப்பிடங்களாக பயன்படுத்துவதால், கடுமையான துர்நாற்றம் வீசுவது பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. துறைமுகம் ரெயில்வே சந்திப்பு என்ற பெயர் மட்டுமே உள்ளதே தவிர பெரும்பாலான ரெயில்கள் இங்கு நிற்பதே இல்லை. இதனால் துறைமுகம் ரெயில் நிலையம் காட்சிப்பொருளாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிலையம் இங்கு நின்று செல்ல வழி வகுக்க வேண்டும், மீண்டும் பார்சல் சர்வீஸ் சேவையை தொடங்க வேண்டும் என்றார்.

அனைத்து ரெயில்களும் நிற்க வேண்டும்

அதேபோல் கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரி சரவணன் என்கிற கந்தபெருமாள் கூறும்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்ல எங்களுக்கு இங்கிருந்து ரெயில் வசதிகள் இல்லை. அப்படியே செல்ல வேண்டுமானால் இங்கிருந்து பஸ் ஏறி விழுப்புரம் சென்று பின்னர் அங்கிருந்துதான் ரெயிலில் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதால். ரெயில் பயணம் இன்னும் இப்பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே இந்த வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களும், இங்கு நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் கடலூர் துறைமுகம் ரெயில் சந்திப்பில் செயல்பட்டு வந்த ரயில்வே பார்சல் அலுவலக சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். இரவு நேரங்களில் பிளாட்பாரங்களில் மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் மிகவும் அச்சம் அடைகின்றனர். எனவே மின் விளக்கு மற்றும் குடிநீர், கழிப்பறை, பிளாட்பாரங்களில் மேற்கூரை அமைப்பது போன்ற பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ரெயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும். இதன் மூலம் ரெயில்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றார்.


Next Story