அரசு பஸ்சில் வந்த பயணிகளை வனத்துறையினர் இறக்கிவிட்டதால் பரபரப்பு


அரசு பஸ்சில் வந்த பயணிகளை வனத்துறையினர் இறக்கிவிட்டதால் பரபரப்பு
x

மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அரசு பஸ்சில் வந்த பயணிகளை வனத்துறையினர் இறக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அரசு பஸ்சில் வந்த பயணிகளை வனத்துறையினர் இறக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிமுத்தாறு வனச்சோதனை சாவடி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, கோதையாறு, குதிரைவெட்டி, ஊத்து, நாலுமுக்கு போன்ற இடங்களுக்கு அரசு பஸ்சில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்கள் சுற்றுலா சென்று வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு பஸ்சில் பயணச்சீட்டு வாங்கிச் செல்லும் பயணிகளை வனத்துறையினர் மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியில் இறக்கி விடுவதாக கூறப்படுகிறது.

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சூழல் சுற்றுலா வாகனத்தில் செல்ல ஒரு நபருக்கு ரூ.350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை அரசு பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம்.

பயணிகளை இறக்கிவிட்டனர்

இந்த நிலையில் நேற்று காலை மாஞ்சோலைக்கு அரசு பஸ் சென்றது. அதில் சிலர் சுற்றுலாவுக்கு செல்வதற்காக பயணம் செல்கிறார்கள் என்று நினைத்து மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் பஸ்சை மறித்து, சுற்றுலா செல்பவர்கள் வனத்துறையினர் சுற்றுலா வாகனத்தில் தான் செல்ல வேண்டும் எனக்கூறி பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டனர்.

ஆனால் அந்த பயணிகள் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களை பார்க்க செல்வதாகவும், சுற்றுலா செல்லவில்லை எனவும் கூறினார்கள். ஆனால் இதனை வனத்துறை அலுவலர்கள் ஏற்காததால், வனச்சரக காவலர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி அம்பை தாசில்தார் சுமதி, அம்பை கோட்ட வனச்சரக அதிகாரிகள் நித்யா, தமிழரசன், மணிமுத்தாறு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் காசி விஸ்வநாதன், முத்துவேல் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வது தெரியவந்தது. இதனால் அவர்களை அந்த பஸ்சில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story