பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டவர் - வைகோ புகழாரம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டவர் என வைகோ கூறியுள்ளார்.
மதுரை,
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் வங்கத்து சிங்கம் நேதாஜி போர்க்களம் அமைத்தார். அந்தப் படையினர் சிட்டகாங் எல்லை வரை தீரத்துடன் போரிட்டனர். அப்போது நேதாஜியின் பிரதான சேனாதிபதியாக தேவர் விளங்கினார்.
நான் சிறுவயதில் இருந்த போது எங்கள் வீட்டுக்கு தேவர் வந்து இருக்கிறார். அவர் மீது எனக்கு பற்று-பாசம் உண்டு. நான் கடந்த 46 ஆண்டுகளாக தேவர் குருபூஜையில் பங்கேற்று வருகிறேன். கொரோனா பாதிப்பின் போது ஓராண்டு வரவில்லை.
அதேபோல ஜெயிலில் இருந்ததால் ஓராண்டு வர முடியவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டவர். தேவர்ரின் பிறந்த நாளும், மறைந்த நாளும் ஒரே தேதியில் அமைந்த தெய்வீக அம்சத்துக்கு உரியது. தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் ஜாதி, மதம், இனம் வேறுபாடுகளை கடந்து சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர்.
இங்கு ஜாதி, மதத்துக்கு இடம் இல்லை. இங்குள்ள கவர்னர் அபாண்டமாக பேசுகிறார். அவதூறாக பேசுகிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வைத்தியநாத அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு கும்பல் மிரட்டல் விடுத்தது.
அப்போது பசும்பொன் தேவர், துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டார். அதில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க வேண்டும். அவர்களை எவரேனும் தடுத்தால் நானே அங்கு வருவேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பசும்பொன் தேவரின் துண்டுப்பிரசுரம், எதிர்ப்பாளர்களை விரட்டி அடித்தது. தமிழகத்தில் ஜாதி-மதம் வேறுபாடு இல்லை. இங்கு துவேஷங்களுக்கு இடம் இல்லை. தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.