பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை


பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
x

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

திருப்பூர்

தளி,

ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டுவதால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவில் முன்பாக திருமூர்த்திஅணையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

அமணலிங்கேசுவரர் கோவில்

உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் திருமூர்த்தி அணை உள்ளது. அணைப்பகுதியில் சிறுவர்பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும், அடிவாரப் பகுதியில் மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயற்கை சூழலும் இணைந்து மனதிற்கு புத்துணர்வு அளிப்பதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

பின்னர் அனைவரும் பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்தும் அங்குள்ள இயற்கை சூழலை ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். அப்போது கோவிலின் முன்பு உள்ள அணைப்பகுதியில் இறங்கி சுற்றுப்பயணிகள் குளித்து வருவதுடன் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து வந்தனர்.இதனால் நெடுந்தொலைவில் இருந்து குடும்பத்தோடு விடுமுறையை சந்தோஷமாக கொண்டாட பலவித கனவுகளோடு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேரிடும் சூழல் நிலவியது.

கம்பி வேலி

அதைத் தொடர்ந்து கோவிலுக்கு முன்பாக அணைப்பகுதியில் திறந்த வழியாக உள்ள பகுதியை அடைப்பதற்கு கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக அணைக்கு முன்பாக கம்பிவேலி அமைக்கப்பட்டு உள்ளது.இதனால் அணைப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி நுழைவது தடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. அத்துடன் அருவியிலும் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவில் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


Next Story