நோயாளி வெளியேற்றப்பட்ட விவகாரம்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேர் இடமாற்றம்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி வெளியேற்றப்பட்ட விவகாரத்தில், 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி வெளியேற்றப்பட்ட விவகாரத்தில், 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் பிணவறை அருகே, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலில் பெரிய புண் ஏற்பட்டு, அழுகிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ, எறும்பு மொய்த்த நிலையில் ரோட்டில் வீசப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ரெட்கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அந்த அமைப்பினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த நபருக்கு, சர்க்கரை நோய் காரணமாக, காலில் புண் ஏற்பட்டு புரையோடி கால் அழுகிய நிலையில் இருந்தது.
இந்தநிலையில் அவரை சிகிச்சையில் சேர்த்து ஒரு நாள் கூட நிறைவடையும் முன்பு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் வீல் சேரில் அவரை தூக்கி வந்து மீண்டும் பிணவறை அருகே ஓரமாக தள்ளிவிட்டு சென்றார். இதுகுறித்து மீண்டும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஆஸ்பத்திரியில் அந்த நோயாளி அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அவரை வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
2 பயிற்சி டாக்டர்கள்
இதைத்தொடர்ந்து புகாரின்பேரில் விசாரணை நடத்திய டீன் ரத்தினவேல், நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் பணியின் போது அலட்சியமாக இருந்ததாக 2 பயிற்சி டாக்டர்கள் மற்றும் நர்சு, மருத்துவமனை ஊழியர் ஆகிய 4 பேரையும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பாலரெங்காபுரத்தில் இயங்கி வரும் அரசு ஆஸ்பத்திரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.