அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாத நிலை


அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாத நிலை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:15:17+05:30)

வெள்ளையபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

வெள்ளையபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி

திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றியுள்ள சிறுகம்பையூர், பதனக்குடி, வெள்ளையபுரம், பனஞ்சாயல், ஆண்டாவூரணி, அரசத்தூர், கட்டிவயல், நகரிகாத்தான், குஞ்சங்குளம், அஞ்சுகோட்டை ஓரியூர் உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக 2 டாக்டர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த ஆஸ்பத்திரிக்கு போதிய டாக்டர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

டாக்டர்கள் இல்லை

வெள்ளையபுரம் ஊராட்சி தலைவர் பரக்கத் அலி:- வெள்ளையபுரத்தை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குதான் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இங்கு பணிபுரிந்த 2 டாக்டர்களும் பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் போதிய மருத்துவ வசதி பெற முடியாமல் திருவாடானை அல்லது தேவகோட்டைக்கு சென்று தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் இங்குதான் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆஸ்பத்திரிக்கு உடனடியாக டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது சேதம் அடைந்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் புகுந்து விடுகிறது. பிரசவ வார்டும் சேதமடைந்திருப்பதால் கர்ப்பிணிகளும் அச்சத்துடன்தான் உள்ளனர். எனவே, தமிழக அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், பணியாளர்கள் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

உயிரிழப்பு அபாயம்

ஹபீப்நிஷா:- ஒரு ஆண்டாக ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் வருவதில்லை. இதனால் தினமும் இங்கு வரும் நோயாளிகளுக்கு நர்சுகள்தான் சிகிச்சை அளிக்கின்றனர். டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகளை இங்கு கொண்டு வந்தால் டாக்டர்கள் இல்லாமல் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இங்கிருந்து வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது. கர்ப்பிணிகளை பரிசோதனை செய்ய வாரத்தில் ஒரு முறை மட்டும் டாக்டர் வந்து செல்கிறார்.. இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்ைக இல்லை.

இங்கு தினமும் 150 முதல் 200 பேருக்கு மேல் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் டாக்டர்கள் இல்லாததால் பெரும் அலைகளிப்புக்கு ஆளாகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இந்த மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். குறிப்பாக டாக்டர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும். இந்த மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் புதிய கட்டிடங்களையும் காலி பணியிடங்களும் நிரப்பிட மருத்துவ துறை உயர் அதிகாரிகளும் தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story