ஆனைமலை தாலுகாவில் நோயாளிகள் அவதி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர், செவிலியர் நியமனம் எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஆனைமலை தாலுகாவில் நோயாளிகள் அவதி:  ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர், செவிலியர் நியமனம் எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை தாலுகாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் எப்போது என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை தாலுகாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் எப்போது என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.

7 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

ஆனைமலையை தாலுகாவாக அறிவித்து 4 ஆண்டுகள் கடந்தும் எந்த அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யாமல் உள்ளன. குறிப்பாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு மிகவும் அலட்சியம் காட்டுகிறது. ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை, காளியாபுரம், சேத்துமடை, பெத்தநாயக்கனூர், ஆழியார், டாப்சிலிப், பெரிய போது பகுதிகளில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் சித்த மருத்துவம், மகப்பேறு மருத்துவம் என தனித்தனி பிரிவுகளில் தனி கட்டிடங்களும் உள்ளன. வேட்டைக்காரன் புதூர் மற்றும் கோட்டூர் பகுதிகளில் 2 அரசு மருத்துவமனை உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள், 3 செவிலியர்கள், ஒரு மக்கள் தேடி மருத்துவ செவிலியர் என 7 ஆரம்ப சுகாதார நிலையத்தில் 42 ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.

டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை

ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதிலும் பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியர் மட்டுமே பணியாற்றுகின்றார். தற்போது 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை சரிவர கவனிக்க முடிவதில்லை. மேலும் மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படுத்த முடியவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதனால் செவிலியர் மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சிகிச்சை அளிப்பதில் காலதாமதம்

தாத்தூரை சேர்ந்த எலக்ட்ரீசன் ஆனந்தபாபு:- ஆனைமலை ஆரம்ப சுகாதார நிலையம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. அதிலும் டாக்டர் 2 மணிக்கு மேல் இருப்பதில்லை. சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டரும் ஒரு செவிலியரும் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் சுகாதார நிலையத்தில் மர்ம ஆசாமிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு சிகிச்சை கிடைக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.

மகப்பேறு மருத்துவர்கள் வேண்டும்

ஆனைமலையை சேர்ந்த குடும்ப தலைவி சவுந்தர்யா:- 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 24 மணி நேரமும் செயல்பட்டு கூடுதல் செவிலியர்களுடன் மகப்பேறு மருத்துவம் சிறந்த முறையில் பார்த்தனர். ஆனால் கொரோனா பேரிடர் காலம் முடிந்த பிறகு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுவதில்லை. இதனால் கிராமங்களில் உள்ள ஏழை -எளிய கர்ப்பிணிகள் பொள்ளாச்சி, கோவை என பல கிலோமீட்டர் பயணித்து அரசு மருத்துவமனையை தேடி செல்கின்றனர். சிலர் பெண்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முதல் பிரசவம் பார்க்கும் வரை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது. எனவே மகப்பேறு மருத்துவத்துக்கு கூடுதல் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அமைத்து பிரசவம் பார்க்க தேவையான அனைத்து கருவிகளுடன் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் சேவை

சேத்துமடை முருகன்:- சேத்துமடை ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேரத்தில் செயல்படுவதில்லை. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையும் உண்டு. மேல் சிகிச்சைக்கு வேட்டைக்காரன் புதூர் அல்லது பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. மலைவாழ் மக்களுக்கு ஏதேனும் விலங்குகளால் திடீர் விபத்து ஏற்பட்டால் அவசர சிகிச்சை வேண்டும் என்றால் வேட்டைக்காரன் புதூர் மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. அதற்கு பொள்ளாச்சியில் இருந்தும் ஆனைமலை பகுதியில் இருந்து 40 நிமிடம் காத்திருந்த பிறகு ஆம்புலன்ஸ் வருகிறது. இதனால் சில சமயங்களில் படுகாயம் அடைந்தவர்கள் இறந்து விடுகிறார்கள். எனவே சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்.

வேட்டைக்காரன் புதூர் பவித்ரன்:-

வேட்டைக்காரன்புதூர் மற்றும் கோட்டூர் அரசு மருத்துவமனையில் இரவு நேர டாக்டர்கள் இல்லை. இதனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடக்காமல் 17 கிலோமீட்டர் பயணித்து பொள்ளாச்சி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. சில சமயங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள், விபத்துக்குள்ளானவர்கள் சம்பவ இடங்களிலே மரணிக்கும் பரிதாபம் அரங்கேறி உள்ளது. மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைக்க துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதனால் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்

மருந்து தட்டுப்பாடு

ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன்:- பெரிய போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு தாலுகாவிற்கு உட்பட்ட 7 சுகாதார நிலையத்தில் 25 பணியாளர் இல்லாத போது தமிழகத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை வேலை இன்றி தவிக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். மேலும் குறிப்பிட்ட சில மருந்து, மாத்திரைகள் இல்லை என செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனைமலை விஷ்ணு:-

சித்த மருத்துவ வளாகத்தில் எண்ணற்ற மூலிகை செடிகள் வைத்து பராமரித்து வருகின்றனர். அழிந்து வரும் மூலிகை செடிகள் குறித்து பள்ளிகளில் அவற்றை பாதுகாக்கவும் மூலிகையின் சிறப்பு அம்சங்கள் குறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது மாதிரியான முகாம்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் விஷமுறிவு மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story