துணை சுகாதார நிலையம் இருந்தும் அவதிப்படும் நோயாளிகள்


துணை சுகாதார நிலையம் இருந்தும் அவதிப்படும் நோயாளிகள்
x

வாரத்தில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படுவதால் துணை சுகாதார நிலையம் இருந்தும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கரூர்

ஆரம்ப சுகாதார நிலையம்

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, நன்செய் புகழூாில் தவுட்டுப்பாளையம்-கட்டிப் பாளையம் செல்லும் சாலையில் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. பின்னர் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு செவிலியரை சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமனம் செய்தனர். அந்த சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர் அங்கு தங்கியிருந்து 24 மணி நேரமும் பணியாற்றி வந்தார். இங்கு தலைவலி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கி வந்தார். அதேபோல், இங்கு கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சைகள், பரிசோதனைகள் அளிக்கப்பட்டும், பிரசவம் பார்க்கப்பட்டும் வந்தது. இந்நிலையில் இங்கு பணியாற்றி வந்த சுகாதார செவிலியர் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் இந்த சுகாதார நிலையத்திற்கான செவிலியரை சுகாதாரத்துறையினர் நியமிக்கவில்லை.

வாரத்திற்கு ஒருமுறை...

இதன் காரணமாக அருகாமையில் உள்ள திருக்காடுதுறையில் செயல்பட்டு வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர் ஒருவர் வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த சுகாதார நிலையத்திற்கு வந்து பொதுமக்களுக்கு சேவைகள் செய்து வருகிறார். இதனால் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், நோயாளிகள் இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு தினமும் வந்து கிசிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இங்கு பணிபுரிய நிரந்தரமான செவிலியர் இல்லாத காரணத்தால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சித்ரா:- கடந்த பல மாதங்களாக செவிலியர் இல்லாததால் துணை சுகாதார நிலையம் பூட்டப்பட்டுள்ளது. திருக்காடுதுறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வருகிறார். அவருக்கு வேலை இருந்தால் அதுவும் வரமாட்டார். இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். இந்த நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் மிக தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?

வீரமணி:- தவுட்டுப்பாளையத்தில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நஞ்சை புகழூர், கட்டிப்பாளையம், நத்தமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சுகாதார நிலையம் திறக்கப்படாத நாட்களில் இப்பகுதியில் உள்ள முதியவர்கள், மூதாட்டிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சரவணன்:- இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செவிலியர் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்து வந்தார். எந்த நேரமும் நோயாளிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் துணை சுகாதார நிலையத்திற்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி வந்து பயன்பெற்றனர். தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த சுகாதார நிலையம் திறக்கப்படுவதால் உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்தாலும் சுகாதார நிலையம் மூடப்பட்டு இருக்கும். இதனால் அவர்களை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அங்கு செல்ல குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பஸ் வசதி உள்ளதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பஸ் வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை

கட்டிப்பாளையத்தை ேசர்ந்த திலகவதி:- எங்களுக்கு தவுட்டுப்பாளையத்தில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ளதால் உடல்நிலை சரியில்லாதபோது உடனே சென்று சிகிச்சை பெற்று வந்தோம். தற்போது வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டிய கட்டாயம் இருப்பதால் இப்பகுதியை சேர்ந்த கிராமப்புற மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் புதிய சுகாதார செவிலியர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமனம் செய்து கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என தவுட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story