கருக்குமடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
சிங்கம்புணாி அருகே கருக்குமடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவும் படைத்தலைவி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவும் நடைபெற்றது
சிங்கம்புணாி அருகே கருக்குமடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவும் படைத்தலைவி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவும் நடைபெற்றது.
வைகாசி திருவிழா
சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள படைத்தலைவி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை பால் குட ஊர்வலம் நடைபெற்றது. எஸ்.எஸ்.கோட்டை சீனி விநாயகர் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து படைத்தலைவி அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சியா முத்துப்பட்டி வேளார் வம்சாவளி கோவில் வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை சியாமுத்துப்பட்டி வேளார் வம்சாவளி கோவில் வீட்டிலிருந்து கிராமத்தார்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு படைத்தலைவி அம்மன் கோவிலில் சேர்க்கப்பட்டது.
புரவி எடுப்பு
அதனை தொடர்ந்து சியாமுத்துப்பட்டியில் உள்ள கருக்குமடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவிற்காக படைத்தலைவி அம்மன் கோவில் அருகே உள்ள குதிரை பொட்டலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேளார் வம்சாவளி குயவர்களிடம் பிடிமண் கொடுக்கப்பட்டு இரண்டு அரண்மனை புரவிகள், 6 காரனகாரர்கள் புரவி மற்றும் ஒரு நேர்த்திக்கடன் புரவிகள் என மொத்தம் 9 புரவிகள் குதிரை பொட்டலில் தயாரானது.
தயாராக இருந்த 9 புரவிகளை கிராமத்தார்கள் சாமியாடிகள் உத்தரவு பிறப்பித்தவுடன் அதனை சுமந்து கொண்டு குதிரை பொட்டலில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக எஸ்.எஸ்.கோட்டை புரவி பொட்டலுக்கு சென்றடைந்தனர். எஸ்.எஸ். கோட்டை சீனிவிநாயகர் கோவிலில் இருந்து சியாமுத்துப்பட்டி படைத்தலைவி அம்மன் கோவிலுக்கு இரவு 9 மணிக்கு பூத்தட்டு எடுத்து வரும் விழா நடைபெற்றது. புரவி பொட்டலில் வைக்கப்பட்ட புரவிகள் அனைத்தும் இன்று மாலை கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ். கோட்டை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.