பென்னிகுயிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பென்னிகுயிக் நினைவு தினத்தையொட்டி கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
முல்லைப்பெரியாறு அணை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும், பாசன வசதிக்கும் பெரிதும் துணையாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது.
இந்த அணையை கட்டியது இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆவார். இவர் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தன் சொத்தை விற்று 1895-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார். பின்னர் சில காலம் தமிழகத்தில் இருந்த அவர், 1903-ம் ஆண்டு சொந்த ஊரான இங்கிலாந்து சென்றார். அங்கு 1911-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி பென்னிகுயிக் மறைந்தார்.
பென்னிகுயிக் நினைவு தினம்
பென்னிகுயிக்கின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழக அரசு லோயர்கேம்பில் அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டி உள்ளது. தமிழக அரசும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் நேற்று, பென்னிகுயிக்கின் 112-வது ஆண்டு நினைவு தினம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள மணிமண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பென்னிகுயிக் உருவ சிலைக்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் விவசாயிகள் மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதில் துணைத்தலைவர்கள் லோகநாதன், ராஜீவ், செயலாளர்கள் ரஞ்சித்குமார், செந்தூர் பாண்டியன், தேனி மாவட்ட பொறுப்பாளர் ஜெகன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
உறுதிமொழி
பின்னர் விவசாயிகள் அனைவரும் கேரளாவின் பொய் பிரசாரங்களை கடந்து முல்லைப்பெரியாறு அணையை காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல் கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு ஆகியோர் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் பென்னிகுயிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.