நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம்


நெல்லை உதவி கலெக்டர்  அலுவலகத்தில் சமாதான கூட்டம்
x

சூரிய மின்சக்தி திட்டத்துக்கு நில எடுப்பு பிரச்சினை: நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம்

திருநெல்வேலி

மானூர் தாலுகா சித்தார் சத்திரம், பிராஞ்சேரி, வெங்கடாசலபுரம், ராஜபதி உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் நிறுவனம் மூலம் சூரிய மின்சக்தி மையம் அமைக்க நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரச்சினை தொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதானகூட்டம் நடைபெற்றது. உதவி கலெக்டர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் நீர்பாசன மேம்பாட்டு சங்க தலைவர் அய்யாத்துரை பாண்டியன், நில உரிமையாளர்கள் சங்க தலைவர் மணி, கால்நடை வளர்ப்போர், இயற்கை விவசாயிகள்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பால்துரை, ஒன்றிய கவுன்சிலர் உச்சிமாகாளி மற்றும் நில உரிமையாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாயிகள் தரப்பில், ஏற்கனவே எங்களது கால்நடை மேய்ச்சல் நிலம் 3,500 ஏக்கரை சிப்காட் தொழில் வளர்ச்சிக்கு வழங்கி விட்டோம். அங்கு நிலம் வழங்கிய யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கவில்லை. தற்போது மேலும் வாழ்வாதாரமாக உள்ள நிலத்தை கைப்பற்றக்கூடாது. மீறினால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

இறுதியாக நில உரிமையாளர்கள் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு கலெக்டருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story