மயில் வேட்டையாடிய வாலிபர் கைது


மயில் வேட்டையாடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:16:58+05:30)

உளுந்தூர்பேட்டை அருகே மயில் வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குஞ்சரம் காப்புக்காடு பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விளைவிக்கக் கூடிய பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது, வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை குஞ்சரம் காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள வயல்வெளியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதை அடுத்து போலீசார் சத்தம் வந்த திசையை நோக்கி சென்றனர். அப்போது அந்த வழியாக நாட்டு துப்பாக்கி மற்றும் சுட்டு கொல்லப்பட்ட 2 மயில்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் எறையூர் பாளையத்தை சேர்ந்த பவுல் அமல்ராஜ்(வயது 21) என்பதும், நாட்டு துப்பாக்கியால் மயிலை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து பவுல் அமல்ராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் வேட்டையாடப்பட்ட 2 மயில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story