ஆக்கிரமிப்பில் நடைபாதை மேம்பாலங்கள்
நாமக்கல்லில் மதுபிரியர்கள் மற்றும் சாமியார்களின் ஆக்கிரமிப்பால் நடைபாதை மேம்பாலங்கள் பயனற்று போகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைபாதை மேம்பாலங்கள் அருகே போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நடைபாதை மேம்பாலங்கள்
நாமக்கல் நகரில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அதனால் பாதசாரிகள் சாலைகளை கடப்பதற்கு ஏதுவாக கடந்த சில ஆண்டுகளுக்கு பஸ் நிலையம் பகுதி, பரமத்தி ரோடு மற்றும் திருச்சி ரோடு என 3 இடங்களில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் அந்த நடைபாதை மேம்பாலங்கள் அனைத்தும் தற்போது குடிமகன்கள் மற்றும் சாமியார்களின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக பஸ் நிலையம் பகுதியில் உள்ள நடைபாதை மேம்பாலத்திலும், திருச்சி ரோட்டில் உள்ள நடைபாதை மேம்பாலத்திலும் சாமியார்கள் மற்றும் மதுபிரியர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதோடு மேம்பாலங்களின் நுழைவு வாயில்களுக்கு அருகே சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நடைபாதை மேம்பாலத்திற்கு செல்லும் வழியேதெரியாத நிலை உள்ளது.
பொதுமக்கள் அச்சம்
மேலும் அந்த நடைபாதை மேம்பாலங்களில் வழிகாட்டு பதாகைகளும், பிளக்ஸ் பேனர்களுக்கும் வைக்கப்பட்டு உள்ளதால், மேம்பாலங்களில் மதுபிரியர்கள் மறைவாக அமர்ந்து மது அருந்த வசதியாக உள்ளது. அதனால் குடிமகன்கள் பட்ட பகலில் மேம்பால நடைபாதையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அதேபோல் பஸ் நிலைய பகுதியில் உள்ள நடைபாதை மேம்பாலமானது சாமியார்களின் வாழ்விடமாக உள்ளது.
மேலும் சாமியார்கள் மற்றும் மதுபிரியர்கள் சிலரின் ஆக்கிரமிப்பால் நடைபாதை மேம்பாலங்கள் பொதுமக்களுக்கு பயனற்ற மேம்பாலங்களாக உள்ளன. மேலும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கழிவு பொருட்கள் ஆகியவற்றால் சுகாதாரமற்று கிடக்கிறது. அதனால் அந்த பாலங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
குறிப்பாக திருச்சி ரோட்டில் உள்ள நடைபாதை மேம்பாலத்தில் அவ்வப்போது சிலர் மது போதையில் உறங்குவதை காண முடிகிறது. அதன் காரணமாக திருச்சி ரோட்டில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் அந்த சாலையில் உள்ள நடைபாதை மேம்பாலத்தை பயன்படுத்துவதில்லை. நாமக்கல் போலீஸ் நிலையம் அருகே உள்ள துறையூர் சாலை சந்திப்பை சாலையிலேயே கடந்து செல்கின்றனர். இதனால் சில நேரம் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
இதனிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நடைபாதை மேம்பாலங்களின் நுழைவு வாயில் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக விரோதிகள்
இதுகுறித்து நாமக்கல் நகர வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குழு நிர்வாகி வாசு ஸ்ரீனிவாசன் கூறியதாவது:-
நாமக்கல் நகரில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கியபோதே எதிர்ப்பு இருந்தது. முதியோர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேம்பாலத்தில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது அந்த மேம்பாலங்கள் சாமியார்கள் மற்றும் மதுபிரியர்கள் சிலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் அந்த பாலங்களை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர்களும், வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதன் மறைவில் மதுபிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். அதனால் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பாதசாரிகள் அந்த மேம்பாலங்களை நடந்து செல்ல பயப்படுகின்றனர். அந்த மேம்பாலங்கள் அனைத்தும் முழுமையாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுவதற்குள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தங்க அனுமதிக்கூடாது
இதுகுறித்து தொழிலதிபர் சுந்தரராஜன் கூறியதாவது:-
பரமத்தி ரோடு மற்றும் திருச்சி ரோட்டில் உள்ள நடைபாதை மேம்பாலங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது மதுபிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. எனவே தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் அந்த மேம்பாலங்களின் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அப்போது தான் மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபாதை மேம்பாலங்கள் மாறும். முன்னதாக மதுபிரியர்கள், சாமியார்கள் என யாரும் அங்கு தங்க அனுமதிக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.