அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இடையீட்டு மையம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இடையீட்டு மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட குழந்தைகள் முன் இடையீட்டு மையம் தொடக்க விழா நடந்தது. மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், மருத்துவ அலுவலர் சிவக்குமார், தேசிய சுகாதார குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மைய கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமரன் வரவேற்று பேசினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு இடையீட்டு மையத்தை திறந்து வைத்தார்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுபட்டவுடன், அந்த குழந்தையை குழந்தைகள் நல மருத்துவர் முழுவதுமாக பரிசோதிப்பார். அப்போது இதய பிரச்சினை, காது கேளாறு, வைட்டமின் கோளாறு என ஏதாவது குறைபாடு உள்ளதா என பரிசோ திக்கப்படும். இதில் ஏதாவது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இயங்கும் குழந்தைகள் முன் இடையீட்டு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும். அறுவை சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் தேவையான சிகிச்சை எங்கு கிடைக்கும் என தெரிந்து, அங்கு அனுப்பி வைக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதம்தோறும் 150-க்கும் அதிகமான குழந்தைகள், இது போன்ற குறைபாடுகளால் பிற மாவட்டங்களுக்கு சென்று வரும் சூழல் இருந்தது. இதை சரி செய்ய இந்த முன் இடையீட்டு மையம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






