கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம்: சென்னையில் கருத்து கேட்பு கூட்டம்


கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம்: சென்னையில் கருத்து கேட்பு கூட்டம்
x

கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவிய சூழலில், பயங்கர சலசலப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆயிரத்தரசு ராஜசேகர், பேனா நினைவு சின்னம் திட்டத்தின் சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜே.ஆர்.மோசஸ் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி பேசினர்.

பெரும் சலசலப்பு

கூட்டத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபனேசர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு பா.ஜ.க. மீனவர் அணி தலைவர் முனுசாமி மற்றும் செம்மலர் சேகர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் வி.பி.மணி, அனைத்து மீனவர்கள் சங்கத் தலைவர் நாஞ்சில் ரவி, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் அருள் முருகானந்தம், இளங்கோ, சமூக செயற்பாட்டாளர் முகிலன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முதலில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து வந்த சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகி அருள் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு தி.மு.க. ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால், கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

திருவள்ளுவரை விட பெரியவரா?

அதைத் தொடர்ந்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி சங்கரும் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்தார். கூச்சல் குழப்பம் அதிகரித்தது.

பின்னர் பா.ஜ.க. மீனவர் அணி மாநில தலைவர் எம்.சி.முனுசாமி பேசும்போது, ''கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தவர் கருணாநிதி. இப்போது, 42 மீட்டர் உயரத்திற்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது என்பது 137 அடிக்கும் மேல் ஆகும். அப்படியானால் கருணாநிதி என்ன திருவள்ளுவரை விட பெரியவரா?. மீனவர்களுக்கு பாதிப்புள்ள இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.

இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூட்ட அரங்கில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவிக்க வந்தார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

திட்டமே மோசடியானது

முன்னதாக பேசிய சமூக செயற்பாட்டாளர் முகிலன், ''பேனா நினைவு சின்னம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை முதலில் தமிழில் கொடுக்கப்படவில்லை. 2021 மே 7-ந்தேதி தான் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். ஆனால், மே 1-ந்தேதி முதலே திட்டம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த திட்டமே மோசடியான ஒன்று'' என்று பேசி கடுமையாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அவரை பேசவிடாமல் தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக தி.மு.க. சார்பில் பேசிய பலர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அப்போது, பேனா நினைவு சின்னம் வேண்டும் என்று பேசிய, வி.பி.மணி, ''தலைவர் கலைஞர் மெரினா கடற்கரை என பெயர் சூட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

கூட்டம் முடித்து வைக்கப்பட்டது

கருத்து கேட்பு கூட்டத்தின் போது, பேனா நினைவுச் சின்னம் வேண்டாம் என்று பேசியவர்களுக்கு எதிராக தி.மு.க.வினரும், பேனா நினைவு சின்னம் வேண்டும் என்று பேசியவர்களுக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் கை கலப்பு ஏற்படும் அளவிற்கு பெரும் சலசலப்புக்கு மத்தியில் தான் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பேனா சின்னத்தை உடைப்பேன் -சீமான் ஆவேசம்

கூட்டத்தில் சீமான் பேசும்போது, 'நினைவுச்சின்னம் வைக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், கடலுக்குள் வைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வரும். கடலுக்குள் பேனா வைப்பதற்கு கல்லையும், மண்ணையும் கொட்ட வேண்டும். இதனால், அழுத்தம் வரும். இதனால், அங்குள்ள பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

உங்களை கடற்கரையில் புதைக்கவிட்டதே (கருணாநிதி உடலை) தப்பு. நீங்கள் இப்போது பேனாவை வையுங்கள். ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன் பார். பேனாவை கடலுக்குள்தான் வைக்க வேண்டுமா?,

பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க எங்கிருந்து பணம் வந்தது?. பேனாவை அண்ணா அறிவாலயத்திலோ அல்லது நினைவிடத்திலோ வைக்க வேண்டியது தானே. கடலுக்குள் வைப்பதால் 13 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம். அதை தடுக்கும் வரை கடுமையாக போராட்டம் நடத்துவோம். இது உறுதி'' என்று பேசினார்.


Next Story