தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்
தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாநகராட்சி 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட 58-வது வார்டு ஹார்விநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக நகர் நல அலுவலர் வினோத்குமார் தலைமையில் சுகாதார பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் மாநகராட்சி குப்பை தொட்டியில் தனியார் மருத்துவ மனையில் இருந்து ஏற்கனவே செலுத்திய ஊசிகள், பஞ்சுகள், குளுக்கோஸ் டியூப், கையுறைகள், பி.பி.கிட், மருந்து குடுவைகள், மருத்துவமனை அலுவலக குறிப்புகள், முக கவசம், சிறுநீர்பைகள், குளுக்கோஸ் பாக்ஸ், மூடிகள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த தனியார் மருத்துவமனை இதுபோன்ற செயல்களை வருங்காலங்களில் செய்யக்கூடாது எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.