பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் - கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்


பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் - கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2023 1:00 AM IST (Updated: 11 Jun 2023 6:47 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகில் 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதில்லை என்ற விளம்பர பலகையை வைக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பலகைகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அபராதம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,064 கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 222 கல்வி நிறுவனங்களுக்கு புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படாத கல்வி நிறுவனம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புகையிலை தடுப்பு திட்டம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பான அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் புகையிலை பொருட்கள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story