அதிக பாரம் ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவில் அதிக பாரம் ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் லாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், கிணத்துக்கடவு போலீசார், வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கடந்த ஒரே வாரத்தில் 4 லாரிகள்அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சிக்கலாம்பாளையம் பகுதியில் கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார், பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுல் கிருஷ்ணன், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றி வந்த 2 லாரிகளை கண்டுபிடித்து அவற்றிற்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தனர்.