சிகரெட், புகையிலை விற்ற 30 கடைகளுக்கு அபராதம்
நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சிகரெட் புகையிலை விற்பனை செய்த 30 கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சிகரெட் புகையிலை விற்பனை செய்த 30 கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
அதிரடி ஆய்வு
நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே 100 மீட்டர் தூரத்துக்குள் கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரதாப், சுகாதார ஆய்வாளர்கள் மணிமாறன், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் உள்ள கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
இந்த ஆய்வில் அரசின் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் கிலோ கணக்கில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரதாப் கூறும் போது:-
பள்ளி, கல்லூரிகள் அருகே 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகளில் சிகரெட், புகையிலை விற்கக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி சிகரெட், புகையிலை பொருட்களை விற்பனை செய்த 30 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.6,000 அபராதம் விதித்துள்ளோம்.
பொது இடங்களில் புகை பிடித்தவர்கள்
மேலும் சிகரெட் விற்பனை செய்யும் கடை அருகில் சிகரெட் பிடிக்க கூடாது என போர்டு வைக்க வேண்டும் என்றும், அபாய விளம்பரம் இல்லாத சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.இதை மீறி விற்பனை செய்தால் அதிகப்படியான அபராதம், கடைக்கு சீல் வைத்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
அதேபோல பொது இடத்தில் நின்று புகைப்பிடித்ததாக 3 நபர்களுக்கு ரூ.100 வீதம் 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். என்றார். ஆய்வின்போது நலக்கல்வியாளர் மணவாளன், சுகாதார பணிகள் துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கோகுல்நாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.