5 வாலிபர்களுக்கு அபராதம்


5 வாலிபர்களுக்கு அபராதம்
x

5 வாலிபர்களுக்கு அபராதம்

தஞ்சாவூர்

சிறு வயதிலேயே மோட்டார் சைக்கிள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் வருங்காலத்தில் பைக் ரேசராக வர வேண்டும் என்ற கனவில் இருந்து வருகின்றனர். இளைஞர்கள் தற்போது பைக் ரேஸ் பயிற்சிகளுடன், ஸ்கீம் பைக் மற்றும் ஒற்றை சக்கரத்தில் வீலிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சை பைபாஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் மாலை நேரங்களில் மோட்டார் சைக்கிள்களை கொண்டு ஒற்றை சக்கரத்தில் வீலிங் செய்வது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலர் தலைகவசம் கூட அணிவது இல்லை. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 5 வாலிபர்களை பிடித்தனர். இவர்களுக்கு விபத்தில் கை, கால்களை இழந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை பற்றிய வீடியோவை காண்பித்து, நீங்களும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள் என போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் தஞ்சை அண்ணாசாலை பகுதியில் நேற்றுமாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருடன் இணைந்து இந்த 5 வாலிபர்களும் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் இனிமேல் மோட்டார் சைக்கிளில் சாகச முயற்சிகளில் ஈடுபடமாட்டோம் என வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்கள் 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story