வாருகாலில் கொட்டியவருக்கு அபராதம்
வாருகாலில் கொட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இவ்வாறு கட்டப்படும் கட்டிடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை கட்டிட உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் கொட்டி வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடமிருந்து புகார்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் முத்துராஜ் பி.எஸ்.ஆர். ரோட்டில் துப்புரவுபணிகளை கண்காணித்த போது அப்பகுதியில் உள்ள வாருகாலில் கட்டிட கழிவுகள் போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது ஆலோசனையின் பேரில் கட்டிட உரிமையாளர் கணேசனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கட்டிடக்கழிவுகளை பொது இடத்திலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் யாராவது கொட்டி வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.