சட்டவிரோதமாக மருத்துவக்கழிவுகளை சேகரித்து அழித்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம்
நெல்லையில் சட்டவிரோதமாக மருத்துவக்கழிவுகளை சேகரித்து அழித்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பாளையங்கோட்டை மண்டலம் சீவலப்பேரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் அளவுக்கு அதிகமாக சேகரித்து பின்னர் அவை அழிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர் முருகேசன், ஆய்வாளர்கள் சங்கர்லிங்கம், அந்தோணி, பெருமாள் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் சட்டவிரோதமாக மருத்துவக்கழிவுகளை சேகரித்து வைத்து எரித்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் லாரிகளை கொண்டு சட்டத்துக்கு புறம்பாக மருத்துவக்கழிவுகளை கொண்டு செல்லப்பட்டு எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் லாரிகளில் மருத்துவக்கழிவுகளை எடுத்துச்செல்ல உதவியதாக சுகாதார மேற்பார்வையாளர் ஒருவரையும் பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். அத்துடன் இதுகுறித்து சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.