தரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகங்களுக்கு அபராதம்
வாணியம்பாடியில் தரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்திரவின் பேரில் வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி நகராட்சி பகுதிகளில் உள்ள அசைவ ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு செய்தார். அப்போது ஒரு உணவகத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்படாமல் இருந்தது. அந்த உணவகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இரண்டு உணவகங்களில் அதிக வண்ணம் சேர்க்கப்பட்ட கிரில் சிக்கன் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அந்த உணவகத்திற்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு உணவகத்தில் இருந்த தரமற்ற இரண்டு கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது. அந்த உணவகத்திற்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சிக்கன் மற்றும் மட்டனில் அதிக வண்ணம் சேர்க்கக்கூடாது என்றும், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக்கூடாது என்றும் பழைய இறைச்சியை அடுத்த நாள் வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
இதேபோல் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சவர்மா கடைகள், சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தரமற்ற வகையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.