குறிப்பிட்ட தேதிக்குள் வீடு கட்டிக்கொடுக்காத நிறுவனத்துக்கு அபராதம்
குறிப்பிட்ட தேதிக்குள் வீடு கட்டிக்கொடுக்காத நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை கோர்ட்டு உத்தரவிட்டது.
பாளையங்கோட்டை மகாராஜ நகர் பொன்விழா நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 71). இவர் ஒரு கட்டுமான நிறுவனம் கட்டி வந்த அப்பார்ட்மென்ட் குடியிருப்பில் ரூ.37 லட்சத்துக்கு வீடு வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளார்.
அந்த நிறுவனம் 18 மாதங்களில் வீட்டை கட்டி தருவதாகவும், அதற்கு மேல் காலமாதம் ஆனால் அதற்கான வீட்டு வாடகையை தந்து விடுவதாகவும் கூறிஉள்ளனர். மேலும் குறிப்பிட்ட நவீன வடிவில் வீட்டின் முகப்பு பகுதியை அமைத்து தருவதாகவும் கூறிஉள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வீடு கட்டிக்கொடுத்ததுடன், நவீன வடிவ முகப்பும் அமைத்து கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக சொக்கலிங்கம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிளாட்சன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வழக்கை விசாரித்து, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் சொக்கலிங்கத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தொகை மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.