போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்வு விபத்தை தடுக்குமா?; தேனி மக்கள் கருத்து
போக்குவரத்து விதிமீறல் அபாரத தொகை உயர்வு விபத்தை தடுக்குமா என்று தேனி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனித உயிர் விலை மதிப்பற்றது. சாலை விபத்துகளில் மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல் முக்கிய காரணமாக உள்ளது. அதிக வேகம், அதிக ஆட்கள் ஏற்றிச் செல்வது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
சாலை விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், விதிகளை மீறுபவர்கள் மீறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். போலீசார் மூலம் பல்வேறு அபராத நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பலரும் விதிகளை மீறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விதிமீறும் நபர்கள் ஏற்படுத்தும் விபத்துகளில் எந்த தவறும் செய்யாத குழந்தைகள், பெண்கள் என பலரின் உயிரும் பறிபோகும் சோக சம்பவங்களும் நிகழ்கின்றன.
அபராதம் உயர்வு
அபராத தொகை குறைவாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பலரிடம் அலட்சியம் அதிகமாக இருந்தது. எனவே, அபராத தொகையை அதிகரித்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும் என்று மத்திய அரசு முடிவு செய்து, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த அபராத தொகை ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதிவேகமாக வாகனம் ஓட்டினாலோ, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000, பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாவிட்டால் அவருக்கும் ரூ.1,000, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர வாகனங்கள் செல்லும் போது வாகனத்தை சாலையோரம் ஒதுக்கி அவற்றுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.
கரும்புள்ளி மறையுமா?
தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஹாரன் அடிப்பது போன்ற செயல்களுக்கு முதல் முறை ரூ.1,000, அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கதிகலங்கியுள்ளனர். இந்தியாவில் சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி உள்ளது. பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா? தமிழ்நாடு மீதான கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றிய தேனி மாவட்ட மக்களின் பார்வை வருமாறு:-
பாகுபாடு காட்டக்கூடாது
தட்சிணாமூர்த்தி (தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்):- சாலை விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சாலை விதிகளை கடைபிடிக்கும் யாருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்குவதோடு, அப்பாவி மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். விபத்துகளால் ஒருவர் உயிரிழப்பது என்பது அவருடைய குடும்பத்துக்கு பெரிய இழப்பு. விபத்துகளில் கை, கால்களை இழந்து வாழ்நாள் முழுவதும் பாதிப்புகளை சுமந்து பலர் வாழ்கின்றனர். சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனாலும் பலர் விதிகளை மீறுகின்றனர். போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தான் அபராதம். விதிகளை தவறாமல் பின்பற்றினால் விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்கலாம். மது அருந்தாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் மிச்சப்படுத்தலாம். ஹெல்மெட் அணிந்து சென்றால் ரூ.1,000 மிச்சப்படுத்தலாம். ஆம்புலன்சுக்கு வழிவிட்டால் ரூ.10 ஆயிரத்தை மிச்சப்படுத்தலாம். எனவே, போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
செல்வம் (ஆட்டோ டிரைவர், தேனி):- அபராத தொகையை அதிகரித்து இருப்பதை வரவேற்கிறேன். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் யாரும் இதனால் பாதிக்கப்படப்போவதில்லை. மக்கள் இதை கடைபிடிப்பது ஒருபுறம் இருக்கட்டும். போலீசார் இந்த அபராத விதிப்பு நடைமுறையில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என எந்த பாகுபாடும் காட்டக்கூடாது. பெரும்பாலும் இதுபோன்ற அபராத நடவடிக்கைகளில் எளிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சியினர் நடத்தும் இருசக்கர ஊர்வலங்களில் ஹெல்மெட் அணியாமலும், 3 பேர் அமர்ந்தும் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. அப்போது பாதுகாப்பு பணி என்று போலீசார் வேடிக்கை மட்டுமே பார்ப்பதை கைவிட்டு, அதுபோன்ற நிகழ்வுகளிலும் போக்குவரத்து விதிமீறல் மீதான நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுக்க வேண்டும். அதுவே மிகச்சிறந்த விழிப்புணர்வாகவும் இருக்கும். அதே நேரத்தில் போலீசார் வாகன தணிக்கை செய்வதை முறையாக செய்ய வேண்டும். பல இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் வாகன பதிவு எண்ணை குறித்து கொண்டு அபராதம் விதிக்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் வாகன எண்ணை தவறாக குறித்துவிட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு பதில் வேறு வாகனங்களுக்கு அபராதம் விதித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும்
விஜயகுமார் (சலூன் கடைக்காரர், தேனி):- இந்த அபராத தொகையை உயர்த்தியது நல்ல விசயம் தான். ஆனால், இந்த அளவுக்கு உயர்த்தி இருக்க வேண்டாம். அபராதம் விதிக்கப்படும் அதே நேரத்தில் பல ஊர்களில் சாலைகள் சேதம் அடைந்து விபத்து ஏற்படுத்தும் அபாயத்துடன் உள்ளன. சாலைகளையும் சீரமைக்க வேண்டும். ரவுண்டானா பகுதிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டாலும், அதற்கு மேல் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. அதனால் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றினால் அபராதம் விதிக்கப்படும் அதே நேரத்தில், அரசு பஸ்களில் நிற்க கூட இடமின்றி படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் அளவுக்கு ஆட்களை ஏற்றினால் அபராதம் விதிக்கப்படுவது இல்லை. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும். ஏர்ஹாரன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பதுபோல், பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பி பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதை தடுக்கவும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் விபத்துகள் குறைந்து தமிழகத்தின் மீதான கரும்புள்ளி விலகினால் மகிழ்ச்சி.
மல்லிகாதேவி (அரசுப்பள்ளி ஆசிரியை, உத்தமபாளையம்):- அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும். இனிமேல் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது குறையும் என நம்புகிறேன். அரசு நடவடிக்கையால், வெளிநாடுகளில் சாலை விதிகளை மக்கள் மதிப்பது போல், இங்கும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். வாகன பெருக்கமும், சாலையோர ஆக்கிரமிப்பும் பெரும் பிரச்சினையாக உள்ளது. ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு முதல் முறை ரூ.1,000 அபராதம் விதிப்பது போல், அவர்களுக்கு அந்த தொகைக்கு ஒரு ஹெல்மெட் வாங்கிக் கொடுக்கலாம். மீண்டும் அதே நபர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.