போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் - புதிய திட்டம் அறிமுகம்
தமிழகம் முழுவதும் உள்ள சாலையில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசின் வழகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக வேகம், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அபராதம் விதிக்க புதிய நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது
தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத்தொகையை செலுத்திக்கொள்ளலாம்.
குற்றத்தின் போது வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஓட்டவில்லை என்றால், அவர் காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் முன், நிரபராதி என்று உரிமை கோரலாம், அவர் ஓட்டுநர் அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரத்தை வழங்கலாம்.
போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.