ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.
ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த முறை வரப்பெற்ற 21 மனுக்களில் தீர்வு காணப்பட்ட 15 மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள 6 மனுக்கள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் வரப்பெற்ற 29 கோரிக்கை மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக மனுவின் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இனிவரும் காலங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு சார்பு அலுவலர்களை அனுப்பாமல் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
புதிய இணையதளம்
கூட்டத்தில் நிதித்துறை கூடுதல் செயலாளர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இயக்குனர் ஸ்ரீதர் கலந்துகொண்டு பேசியதாவது:-
இனிவரும் காலங்களில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் நிலுவைத் தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக இணையதளம் மற்றும் குறுஞ்செயலி செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியின் கீழ் வழங்கப்படும் இறப்பு நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரத்தினை உயிரிழந்தவர்களின் ஈமச்சடங்கினை ஈடுகட்ட விரைந்து வழங்கிட வேண்டுமென கருவூல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி, 2014-ம் ஆண்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ், நிலுவையிலுள்ள காப்பீட்டு தொகைகள் தற்பொழுது வரை 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அனைத்து நிலுவைத் தொகைகளையும் விரைந்து வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கருவூல மண்டல இணை இயக்குனர் சாந்தி மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, கருவூல அலுவலர் சாந்தி, நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சண்முக சுந்தரம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.