ஓய்வூதியர்கள் இணையதளம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்


ஓய்வூதியர்கள் இணையதளம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்
x

ஓய்வூதியர்கள் இணையதளம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை


ஓய்வூதியர்கள் இணையதளம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியர்களுக்கான நேர்காணல்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று திருவண்ணாமலை மாவட்ட கருவூலம் மற்றும் சார்கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கு ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டன.

இதனை எளிமையாக்கும் நோக்கத்தில் சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும், பணிக்கால ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்திலும் என ஓய்வூதியர்கள் தங்களுக்குரிய மாதங்களில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

மேலும் நேர்காணல் மாதத்திற்கு அடுத்த மாதம் கூடுதலாக கால அவகாசமாக வழங்கப்பட்டு நேர்காணல் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023-ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்து கொள்ளலாம்.

மின்னணு வாழ்நாள் சான்று

இந்த நடைமுறையின் படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கு தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

எனவே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இணையதளம் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து நடப்பாண்டிற்கான (2023- 2024) நேர்காணல் செய்து கொள்ளலாம்.

ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ், இந்திய தபால் துறை வங்கி சேவை, இ-சேவை, பொது சேவை நிறுவனத்தின் மூலமாகவும், ஆண்ட்ராய்டு செல்போனில் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலியை பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பெறலாம்.

ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகம், ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிகணக்கு புத்தக ஆகிய ஆவணங்களுடன் உரிய மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு நேரில் சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story