அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதாக உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதாக உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.
ஓய்வூதியம்
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் திட்டத்தின் கீழ், அகம் அந்தயோத்யா பிரசாரம் மூலம், 60 வயது நிறைவடைந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், கூலி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் குடும்ப தலைவிகள், வீட்டு தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், சமையல் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், கணக்காளர்கள், தோல் தொழிலாளர்கள், ஆடியோ வீடியோ தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறலாம்.
மாதாந்திர வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். இ.பி.எப்.ஓ., ஈ.எஸ்.ஐ.சி., என்.பி.எஸ். போன்ற அரசு நிதி உதவி திட்டத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள் ஆவர்.
நிபந்தனை
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர், பயனாளியாக பதிவு செய்ததும், 60 வயது நிறைவு பெறும் வரை மாத தவணையாக வயதுக்கு ஏற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த இயலாத நிலையில், செலுத்திய பணத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திரும்ப பெறலாம். மேற்கண்ட தகவலை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருஞானசம்மந்தம் தெரிவித்துள்ளார்.