தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஏற்க மக்கள் தயாராக இல்லை


தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஏற்க மக்கள் தயாராக இல்லை
x
தினத்தந்தி 16 Oct 2023 7:15 PM GMT (Updated: 16 Oct 2023 7:15 PM GMT)

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.

பாதயாத்திரை

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி தொடங்கினார். 3-ம் கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி பாதயாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள மெட்ரோ பள்ளி அருகில் இருந்து மாலை 4.50 மணிக்கு அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார்.

உற்சாக வரவேற்பு

தொடக்க விழாவில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைத்து அண்ணாமலையுடன் 3 கி.மீட்டர் தூரம் வரை நடந்து சென்றார். அப்போது மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் சென்றார்.

அண்ணாமலை பாதயாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன் பொதுமக்கள் அண்ணாமலையுடன் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 7.20 மணியளவில் வந்து பாதயாத்திரை நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசும் போது கூறியதாவது:-

குடும்ப ஆட்சி

தமிழகத்தில் பரம்பரை ஆட்சி, குடும்ப ஆட்சியை ஏற்க மக்கள் தயாராக இல்லை. மிக சிறப்பான நல்லாட்சியை நோக்கி காத்திருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ் ஊழலை எதிர்த்து நிற்கும் ஒப்பற்ற தலைவர் அண்ணாமலை. என் மண்... என் மக்கள்... யாத்திரையின் மூலம் ஊழல் ஆட்சியின் பிடியில் இருந்து தமிழகத்தை வெளியே கொண்டு வந்து வளர்ச்சி பாதையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி உலக அளவில் எடுத்துச் சென்று பாராட்டி வருகிறார்.தி.மு.க. அரசின் மந்திரி சபையில் 2 பெண்கள் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் பிரதமர் மோடியின் மந்திரி சபையில் 11 பெண்கள் மத்திய மந்திரியாக உள்ளனர்.

எதிர்காலம்

இனி மூன்றில் ஒரு பங்கு பெண்கள் எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் இருப்பார்கள். காங்கிரசும், தி.மு.க.வும் செய்தது என்ன? 2 ஜி ஊழல், 3 ஜி மற்றும் 4 ஜி ஊழல் என்று ஊழலை தான் செய்து கொண்டிருந்தார்கள். 2 ஜி புகழ் பெற்ற ஆ.ராசாவை ஒரு நாளும் சகிக்க மாட்டோம். 140 கோடி இந்திய மக்களின் வளமான, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை நரேந்திர மோடி திட்டமிட்டு செய்து வருகிறார். தற்போதைய இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம், வளமான வேலைவாய்ப்பு, பாதுகாப்பு அளித்து வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விலக்கப்பட வேண்டும். பா.ஜ.க. ஆட்சி மலர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், மத்திய மந்திரி எல்.முருகன் பேசும்போது கூறியதாவது:-

மீண்டும் பிரதமர் மோடி

தமிழகத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை பிரதர் மோடி கொடுத்து உள்ளார். ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்துள்ளார். விண்வெளிக்கு சந்திராயனை அனுப்பி வெற்றி கண்டுள்ளோம். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.

நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவை வெற்றி பெற செய்து ஊழல் வாதி ஆ.ராசாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். பினாமி பெயரில் அவர் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளார். சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. கொள்ளையர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



Next Story