தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை


தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க. விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

ராமநாதபுரம்

தமிழகத்தில் பா.ஜ.க. விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரத்தில் 10 எம்.பி. தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அடுத்த மாதம் 16, 17, 18 தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:- ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதைபற்றி நமக்கு கவலை இல்லை. தி.மு.க.வை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே இலக்கு. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. புதிய ஆட்சியில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும். மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசை அச்சுறுத்தி பார்க்கிறது. இவ்வாறு பேசினார்.

மக்கள் தயாராக இல்லை

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- 18 தென்மாவட்டங்களை உள்ளடக்கிய 10 எம்.பி. தொகுதிகளுக்கான மண்டல அளவிலான வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அடுத்த மாதம் 16-ந் தேதி இரவு ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு இல்லத்தில் தங்குகிறார். 17-ந் தேதி 10 எம்.பி. தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பாக முகவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 18-ந் தேதி ராமேசுவரத்தில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறவேண்டும். ராமநாதபுரம் தி.மு.க.வின் கோட்டை என்பதை இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு, தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தி.மு.க. அரசு எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசு நீக்கப்பட வேண்டும்.

மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரை அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருவார்த்தை கூட பேசவில்லை. வழக்குகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த எடப்பாடிக்கு மக்களை சந்திக்க எந்த தகுதியும் இல்லை. அமித்ஷா, அண்ணாமலை நடைபயணம் குறித்து நமக்கு கவலை இல்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்திற்கென தனியாக ரூ.2 ஆயிரத்து 820 கோடியில் காவிரி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.


Next Story