திருப்பரங்குன்றத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி
திருப்பரங்குன்றத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் சிதம்பரனார் தெரு, காமராஜர் தெரு, தென்றல் தெரு, மகாத்மா காந்தி தெரு சார்ந்த குடியிருப்பு பகுதிகள் உள்ளது. தூறல் மழை பெய்தால்கூட இந்த பகுதிகள் மழைநீர் தேங்கிவிடும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனாால் மகாத்மா காந்தி தெரு, தென்றல் தெருவில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தென்றல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் கூறும்போது, இதுதொடர்பாக புகார் செய்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைகாலம் வந்தாலே தண்ணீர் தேங்கி கொசுக்கள் தொல்லை ஏற்படுகிறது. அதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.மகாத்மாகாந்தி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி தங்கவேல் கூறும்போது, தெருக்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்லமுடியவில்லை.வேலைக்கு செல்பவர்கள் வாகனங்களில் சென்று வர முடியவில்லை.இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர். மாநகராட்சி கவுன்சிலர் உசிலை சிவா கூறும்போது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.