கால்வாயில் முளைத்துள்ள செடி கொடிகளால் பொதுமக்கள் அவதி


கால்வாயில் முளைத்துள்ள செடி கொடிகளால் பொதுமக்கள் அவதி
x

கால்வாயில் முளைத்துள்ள செடிக, கொடிகளால் கழிவுநீர் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

கரூர்

கால்வாய்

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி ஒரம்புப்பாளையம் பகுதியில் தொடங்கி கவுண்டன்புதூர், செட்டி தோட்டம், செல்வநகர், முத்தனூர் வழியாக சென்று முத்தனூர் வழியாக செல்லும் புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. அதன் பிறகு புகழூர் வாய்க்காலின் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய குளம் வெட்டப்பட்டது. உபரி நீர் கால்வாய் வழியாக வரும் தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி குளம் நிறைந்த பின் புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒரம்புப்பாளையம் முதல் முத்தனூர் வரை உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த உபரி நீர் கால்வாய் வழியாக சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அதேபோல் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்து இந்த கால்வாய் வழியாக செல்கிறது. உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் கால்வாய் நெடுகிலும் அவ்வப்போது ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து வருவதும், அதை அவ்வப்போது இயந்திரம் மூலம் அகற்றி கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் தங்கு தடை இன்றி செல்ல வழி வகை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் இந்த கால்வாய் வழியாக வரும் விவசாய உபரிநீரும், மழை நீரும் தங்குதடையின்றி செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் அதிக மழை பெய்து வரும் சூழலில் இந்த வழியாக மழை நீர் செல்ல முடியாமல் உபரி நீர் கால்வாய் அருகே உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு, சிரமப்பட்டு வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கால்வாய் நெடுகிலும் மண்கள் சரிந்து விழுந்து கால்வாயின் ஆழம் குறைந்து உள்ளது. இதனால் அதிக தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி பள்ளமான பகுதிகளுக்கு செல்கிறது. அதேபோல் ஏராளமான, உயரமான செடி கொடிகள் கால்வாய் நெடுகிலும் முளைத்து வளர்ந்திருப்பதால் இந்த செடிகளுக்குள் பல்வேறு வகையான கொடிய விஷப்பாம்புகள், விஷ தேயில்கள், விஷ பூச்சிகள் செடி கொடிகளுக்குள் தங்கி இருந்து அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் அடிக்கடி புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி தங்கு தடை இன்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிரமம்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறி கருத்துகள் பின்வருமாறு:-

செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்:-

விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரும், மழை நீரும் செல்லும் வகையில் வெட்டப்பட்டுள்ள இந்த கால்வாய் நெடுகிலும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்திருப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக இந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுவதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். அதேபோல் மழைக்காலங்களிலும் பல்வேறு நேரங்களிலும் பாம்புகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து தூர் வார வேண்டும்.

செடி-கொடிகள் ஆக்கிரமிப்பு

செல்வநகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி:-விவசாயிகளின் நலன் கருதியும், குடியிருப்பு வாசிகளின் நலன் கருதியும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் வெட்டப்பட்டதன் காரணமாக மழை நீர் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் தண்ணீரும் இந்த கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் பல ஆண்டுகளாக கால்வாய் அருகே குடியிருக்கும் எங்களது வீடுகளுக்குள் தண்ணீர் போகாமல் வீடுகள் பாதுகாப்பாக இருந்து வந்தது. பல ஆண்டுகளாக இந்த கால்வாய் தூர்வாரப்படாததன் காரணமாக செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் கால்வாய் அருகில் உள்ள எங்களது வீடுகளுக்குள் அடிக்கடி மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து சிரமப்பட்டு வருகிறோம். பலமுறை உள்ளாட்சி நிர்வாகத்திடம் இது குறித்து எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அவதிப்பட்டு வருவது நாங்கள் தான். எனவே மேல் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவித்து வருகிறோம்

முத்தனூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி:-

எங்களைப் போன்ற பலரது வீடுகள் இந்த உபரி நீர் கால்வாய் அருகிலேயே இருக்கிறது இந்த வீடுகளில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம் இந்த கால்வாய்த்தூர் வரப்படாததால் அடிக்கடி தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது நாங்கள் தண்ணீரை அவ்வப்பொழுது வெளியேற்றி வீடுகளுக்குள் குடியிருக்க முடியாமல் தவித்து வருகிறோம். மேலும் பல்வேறு விஷப்பூச்சிகள் அடிக்கடி வந்து செல்கிறது எனவே இந்த உபரி நீர் கால்வாயை தூர்வாரி கால்வாயில் இருபுறமும் சிமெண்ட் கான்கிரீட் மூலம் தடுப்பு சுவர் கட்டி கால்வாயில் இருந்து தண்ணீர் வீடுகளுக்குள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடையின்றி செல்ல வேண்டும்

செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம்:-ஒரம்புப் பாளையத்திலிருந்து முத்தனூர் வரை செல்லும் இந்த கால்வாயை இயந்திரம் மூலம் நெடுகிலும் தூர்வாரி ஆழப்படுத்த படுத்த வேண்டும். பின்னர் விவசாய நிலத்தில் இருந்து வரும் தண்ணீரும், மழைத் தண்ணீரும் இந்த கால்வாய் வழியாக மட்டுமே செல்லும் வகையில் நவீன திட்டத்தை உருவாக்கி காங்கிரீட் மூலம் கால்வாயை செப்பனிட்டு கால்வாய் ஓரத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் மழை காலங்களிலும், மற்ற நேரங்களிலும் இந்த கால்வாய் வழியாக தங்கு தடை இன்றி தண்ணீர் செல்ல வேண்டும். அதற்குண்டான நடவடிக்கையை உள்ளாட்சித் துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இந்த கால்வாயில் முளைக்கும் சம்பு மற்றும் பல்வேறு தாவரங்களை அவ்வப்போது அகற்றுவதால் தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாது. இதை உள்ளாட்சி அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story