மின் வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்


மின் வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
x

தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என தலைஞாயிறில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என தலைஞாயிறில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

தலைஞாயிறில் அ.தி.மு.க சார்பில் தி.மு.க. அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் பிச்சையன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சண்முகராசு, மாவட்ட கவுன்சிலர் இளவரசி, ஒன்றிய செயலாளர்கள் அவை.பாலசுப்பிரமணியன், சவுரிராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.750 ஆக இருந்தபோது ரூ. 100 உதவித்தொகை வழங்கப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. தற்போது ஒரு சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டி விட்டது. ஆனால் உதவித்தொகை மட்டும் இதுவரை தி.மு.க. அரசு வழங்கவில்லை. குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, நீட் தேர்வு ரத்து என பல வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. ஆனால் இதில் எதையுமே செயல்படுத்தவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி அரசு ஊழியர்களையும் தி.மு.க. ஏமாற்றி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story