வீடுகளை சூழ்ந்த வெள்ளம் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தவிப்பு


வீடுகளை சூழ்ந்த வெள்ளம் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தவிப்பு
x

கொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இடுப்பளவிற்கு வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தில் மக்கள் தவித்தனர்.

மயிலாடுதுறை,

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு, மேலவாடி, பாலூரான் படுகை உள்பட 6 கிராமங்களை சூழ்ந்துள்ளது.

இதனால், அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரையோரம் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடுப்பளவுக்கு வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரில் தவித்த சிலர் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் வீடுகளை மட்டுமின்றி அங்குள்ள விளைநிலங்களையும் மூழ்கடித்து உள்ளது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

தொழிலாளி பலி

கொள்ளிடம் அருகே மணியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). கூலி தொழிலாளியான இவர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இவர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தனக்கு சொந்தமான பன்றிகளை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் தவறி விழுந்தார். இதில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story