வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை-அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.குன்னத்தூர் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கி 317 பேருக்கு ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்தில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி அவர்கள் இல்லங்களுக்கே சென்று நோய்களுக்கான மருத்துவ சிகிச்சையும், மருத்துவ உபகரணங்களும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டன. மேலும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருந்தது. ரூ.6 லட்சம் கோடி கடன் இருந்தது. இந்த நிலையிலும், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வித குறைபாடும் ஏற்படாத வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசுக்கு வரி வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இளைஞர் திறன் விழா
வணிகவரி செலுத்தாமல் நிலுவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு துறைரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து உரிய வரித்தொகையை அரசுக்கு செலுத்தி உள்ளார்கள். இதன் மூலம் அரசுக்கு 67 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்க பெற்றுள்ளது. மேலும், தங்களது முதலீட்டுத் தொகையை குறைவாக காண்பித்து வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை கண்காணிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விதிகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் மூர்த்தி, செட்டிக்குளம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டிடத்தையும், ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு, தானிய கிட்டங்கி கட்டிடத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும் யா.ஒத்துக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற "இளைஞர் திறன் விழாவில்" பல்வேறு தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா, மாவட்டஊராட்சிக்குழு தலைவர் சூரியகலா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) காளிதாஸ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் வீரராகவன்(மதுரை மேற்கு), மணிமேகலை (மதுரை கிழக்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.