சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ராஜபாளையம்.
சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ரேஷன் கடை
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் 16-வது வார்டில் இதுவரை ரேஷன் கடை கட்டப்படவில்லை. ஆதலால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் செயல்படும் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
எனவே அந்த வார்டில் உள்ள மலையடிவார புறம்போக்கு நிலத்தில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தின் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி சார்பில் கழிப்பறை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சேத்தூர் பேரூராட்சி செயலர் அந்த இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளார்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் கட்டிட பணிகள் நடந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து 16- வது வார்டு கவுன்சிலர் கற்பகம் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தையும், தலைவர் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிர்வாகம் தங்களை அலட்சியப்படுத்துவதாகவும், தங்களது பகுதியில் குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பொது மக்கள் கோஷம் போட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி தலைவர் பேசவந்தார். இதையடுத்து அவரிடம் பொதுமக்கள் பேச மறுத்து விட்டனர்.
அதிகாரி உறுதி
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துணை வட்டாட்சியர் கோதண்டராமன் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு, அங்கு ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கட்டிட பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.