ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

அத்தியூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர்

வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வளாகம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவற்றை செய்து தரக் கோரி அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு தலைவர் ஊராட்சியில் நிதி இல்லை என கூறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று 1, 3 மற்றும் 8 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக கிராமம் முழுவதும் துண்டு பிரசுரம் அச்சடித்து வழங்கினர். அதன்படி நேற்று மாலை அத்தியூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மல்லிகாமணி, பூர்ணிமாவெற்றிவேல், ஏழுமலை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தகவலறிந்த அரியூர் போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story