ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x

தா.பழூரில் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தா.பழூர்:

குடிநீர் வினியோகிக்கப்படவில்லை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அடிக்காமலை காலனி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதில் ஆத்திரமடைந்த அடிக்காமலை கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது குடிநீர் வசதி ஏற்படுத்தி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள்

இது பற்றி தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறினர்.

மேலும், அடிக்காமலை கிராமத்தில் எந்த அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரவில்லை என்றும், வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரைக்கூட சரியாக வினியோகிக்கவில்லை என்றும் கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர். பின்னர் மாலைக்குள் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, குடிநீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story