குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சீராக குடிநீர் வினியோகிக்க கோரி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
சீராக குடிநீர் வினியோகிக்க கோரி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகம் முற்றுகை
பொள்ளாச்சி நகரையொட்டி சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இங்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்வதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மகாலிங்கபுரத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளிடம், மாக்கினாம்பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடவடிக்கை
மாக்கினாம்பட்டி ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது வழங்கப்படும் குடிநீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இதே ஊராட்சியையொட்டி உள்ள நகர பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை மாற்றி 212 கிராமங்களுக்கு என்று மாற்றி அமைத்தும் குடிநீர் அளவு குறைவாக உள்ளது. எனவே மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் சிரமம்
இதேபோன்று சின்னாம்பாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சின்னாம்பாளையம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் பெரிய ஊராட்சியாகும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் திட்டங்களில் ஊராட்சிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குடிநீரின் அளவு சரியான முறையில் வருவதில்லை. 5 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை கூட வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீரின் அளவை உயர்த்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






